Monday, May 22, 2006

ச(ஜ)ப்பானியர்களுக்குக் கோடி நன்றிகள்...

சில நாட்களுக்கு முன், தமிழார்வம்(!) கொண்ட சிலர் சேர்ந்து, சென்னை ஆசியவியல் நிறுவனம் சென்றிருந்தோம்... சென்னையின் சற்று வெளிப்புறத்தில், அமைதியான செம்மஞ்சேரி என்னுமிடத்தில், சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த நிறுவனம்...
பேருந்திலிருந்து இறங்கி, நிறுவனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்... தொடக்கம் முதலே காத்திருந்தது ஆச்சர்யம்... நிறுவனத் தலைவருக்குத் தொலைபேசியில் எங்கள் வருகையைப் பற்றித் தெரிவித்துவிட்டு எங்கள் நடையைத் தொடர்ந்தோம்... சற்று நேரத்தில் ஒரு மகிழுந்து எங்களை நோக்கி வந்தது... அது எங்களை நிறுவனத்துக்குக் கூட்டிச் செல்லத்தான் வந்ததென்று அப்புறம் தெரிந்தது...

நிறுவனத்தின் வாசற்படியில்... மலைத்து நின்றுவிட்டோம்... அந்த நிறுவனத்துக்குக் கட்டிடத்தை வழங்கியவர்கள் சப்பானின் "நிப்பான்" (Nippon) நிறுவனம்... உள்ளே சென்று நிறுவன மேலாளரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம்... எங்களுக்கு நிலை கொள்ளாத திகைப்பு... அங்கே முதுகலைப் பட்டம் படிப்பவர்களில் நிறையப் பேர் சப்பானியர்கள்... ஓலைச் சுவடிகளைப் படிப்பதிலிருந்து, அதை மொழியாக்கம் செய்து, புத்தக வடிவில் வெளியிடுதல் வரை அவர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிின்றது... அங்கிருந்த நூலகப் புத்தகங்களில் பாதிக்கு மேற்பட்டவை அவர்கள் எழுதியவை.... அதில் தொல்தமிழ் பற்றிய புத்தகங்கள் மிக அதிகம்...

இவற்றையெல்லாம் கண்டு கேட்டுவிட்டுத் திரும்பும் வழியில் என்னை நானே கேட்டுக் கொண்டேன்...

"அடே தமிழா!!! காலம் தொட்டுத் தமிழுக்காக, தமிழின் வளர்ச்சிக்காக, எத்தனைப் பேர், தமிழர்களல்லாத எத்தனைப் பேர், உழைக்கின்றனர்... நீ என்றாவது, ஒரு கடுகளவாவது, ஏதாவது செய்திருக்கிறாயா? அல்லது அதைப் பற்றிச் சிந்தித்தாவது இருக்கிறாயா?... என் மனம் சற்றே கனத்தது...."

என் அடுத்தப் பதிவில் ஆசியவியல் நிறுவனம் பற்றியும், தமிழின் வளர்ச்சியில் அதன் பங்கு பற்றியும் விவரிக்க நினைத்துள்ளேன்...

No comments: